Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

ஒவ்வொரு வாசகனும் கவிஞனே!
கா.பாலபாரதி



ஒவ்வொரு வாசகனும் கவிஞனே!

கா.பாலபாரதி

 


மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

சென்னை

ஒவ்வொரு வாசகனும் கவிஞனே! Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License..

This book was produced using PressBooks.com.

 

 

Contents


என்னுரை

ஒவ்வொரு வாசகனும் கவிஞனே!

1.நீயே நான்

2.தோன்றி மறைந்தாய்

3.அவள் வாசனை

4.பழகப் பழகு

5.சத்தியப் பெண்

6.காதல் சந்நியாசி

7.உன்னுள் ஒருவன்

8.உலகின் இதயம்

9.என்னிடமே நடிக்கிறேன்

10.உயிர் தந்த உயிர்

11.எழுவோம்

12.வாசனையும் வலியும்

13.ம(வ)ரம்

14.நானாக வேண்டும்

15.இரும்பு இதயம்

16.பதிலின் கேள்விகள்

17.அவ(ள்)ப் பெயர்

18.உயிர்குடிக்கும் உணர்வுகள்

19.பைத்தியக்காரன்

20.கலங்காதே

21.உயிர் தந்தாய்

22.மனமே வரம்

23.ஊமை வார்த்தைகள்

24.சத்தமின்றிப் பேசுவாய்

25.புறப்படு தமிழா

26.நீயே என் காதலி

27.வசதியான வறுமை

28.உயிருக்குள் அறிவு

29.மலருக்குள் வண்டு

30.ஆண்டவனும் குற்றவாளி

31.பெண்மையும் உண்மையும்

32.நசுங்கும் பூ

33.முடிச்சு

34.உயிரும் உணர்வும்

35.முத்தத்தில் மோட்சம்

36.நல்ல வயசு

37.ஏமாளியும் கோமாளியும்

38.சிகப்பு மலருள் நெருப்பு வண்டு

39.அழி(ளி)க்கப்பட்ட முகவரி

40.எப்போது

41.உறக்கப்போர்

42.துணிந்து வெல்க

43.சிரிக்கும் உலகம்

44.நினைவுக்குள் வாழ்வு

45. விதியை வெல்லும் மதி

46.மர்ம மனம்

47.இறப்பினில் வாழ்க்கை

48.பிறர் உயிருக்கு உரம்

49.புரிவாய்த் துணிவாய்

50.போய் வா நட்பே

FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி

உங்கள் படைப்புகளை வெளியிடலாமே

என்னுரை


அன்பு நெஞ்சங்களுக்கு ,

வணக்கம் . முதலில் , தங்கள் கைகளில் இந்தப் புத்தகம் உயிர் பெற்றிருப்பதற்கு , என் மனமார்ந்த நன்றிகள் .

ஒரு வாசகனாக வலம் வந்த என்னை , திடீரெனக் கவிஞனாகப் பார்த்த நண்பர்களுக்கும் , கவிதை படைக்கச் செய்த அன்பர்களுக்கும் , அறிந்தும் அறியாமலும் என்னைத் தூண்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் , பறந்து சென்ற தாள்களில் பரிதவித்த என் கவிதைகளுக்குத் , தனிப் புத்தகத்தில் இளைப்பாற இடம் தந்த கனிவானவர்களுக்கும் , உயர் அறிவை அள்ளித் தந்து இவ்வுலகிற்கு என்னைக் காட்டிய அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் , பல ஆண்டுக் கனவு இன்று உங்கள் விரல்கள் தீண்டப் பரிட்சயமானதற்கு உதவியாய் இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றியுணர்வை அர்ப்பணிக்கின்றேன் .

புதுக்கவிதை அமைப்பிலேயே , எளிய நடையில் தர விளைந்த எனது முயற்சியும் , எனது கவிதை மொழியும் நிச்சயம் உங்கள் மனதைக் கவரும் என நம்புகிறேன் .

ஊனுடன் உயிர் தந்து , இவ்வுலகத்தைக் காட்டிய என் பெற்றோருக்கும் , உயர் அறிவைப் பெற வழி தந்த என் சகோதரருக்கும் , இம்முதல் நூலை அர்ப்பணம் செய்வதில் பேரானந்தம் அடைகிறேன் .

ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும்

ஒரு வாசகன் இருக்கிறான்

ஒவ்வொரு வாசகனுக்குள்ளும்

ஒரு கவிஞன் இருக்கிறான்

உண்மையே ! இந்நூலின் ஒவ்வொரு வரிகளையும் , உங்களுள் ஒருவனாக , உங்கள் உணர்வுகளின் கவிதைப் பிரதிநிதியாகவே எழுதியுள்ளேன் .

என்றும் உங்கள் பேராதரவுடன்

கா . பாலபாரதி

கா. பாலபாரதி எம்.ஏ (ஆங்கிலம்)., பி.எட்.

மின்னஞ்சல்: [email protected]

கைபேசி: 9715329469

ஒவ்வொரு வாசகனும் கவிஞனே!

கா. பாலபாரதி எம்.ஏ (ஆங்கிலம்)., பி.எட்.

மின்னஞ்சல்: [email protected]

கைபேசி: 9715329469

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License .

மின்னூலாக்கம் : லெனின் குருசாமி

மின்னஞ்சல் : [email protected]

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

1.நீயே நான்


அணுவாய் அலைந்த என்னுடலை – அடக்கி

அண்டம் விழுங்கச்

சுமந்தவளே!

கனவில் என்னை நினைத்துக்கொண்டு – தினம்

கருவில் என்னை

வளர்த்தவளே!

அலுங்கிக் குழுங்கி நடக்காமல் – என்

அங்கம் வளரப்

பொறுத்தவளே!

பாரம் என்று வருந்தாமல் – என்னைப்

பத்திரமாய்க் கருவில்

நிறைத்தவளே!

ஈரைந்து மாதங்களாய் எனைச்சுமந்து – உயிர்

உருவாக்கத் தவம்

செய்தவளே!

ஊனுடன் உயிர் தந்து – என்னை

உலகம் காணப்

பெற்றவளே!

ஊனை உருக்கிப் பாலூட்டி – என்

உடலை வளர்க்கத்

துடித்தவளே!

வார்த்தையும் உண்டோ எம்மொழிதனிலும் – உன்

தாய்மையை வருணிக்கப்

போதவில்லை!

என்ன செய்வதோ கைமாறாய் – உலகில்

உன் தாய்மையினும் பெரிது

ஏதுமில்லை!

மீண்டும் ஜென்மம் வேண்டுமம்மா – உன்னை

வயிற்றில் சுமக்க

வேண்டுமம்மா!

2.தோன்றி மறைந்தாய்

மெழுகின் மீது ஜோதியாய்

உருகிக் கரைந்தாய்!

இரவில் மிளிரும் நட்சத்திரமாய்

பகலில் மறைந்தாய்!

தண்ணீரில் முயன்ற ஓவியமாய்

கலந்து தணிந்தாய்!

மாலையில் மலர்ந்த வானவில்லாய்

மழையில் அழிந்தாய்!

கோடையில் கசிந்த கானல்நீராய்

கண்முன் மறைந்தாய்!

வானில் தோன்றும் மின்னலாய்

வந்து மறைந்தாய்!

கண்விட்டுப் பிரிந்த நீராய்

மண்ணில் புகுந்தாய்!

மனதில் நட்பாய் மலர்ந்து – ஏன்

மறுநொடியில் என்னைப் பிரிந்தாய்!

3.அவள் வாசனை

அவளைக் கண்டேன்

அழகாய்க் கரைந்தேன்!

விழியில் விழுந்தாள்

துளியாய்க் கரைந்தாள்!

முனங்கல் முழுதும்

அவளது பெயரே!

நெஞ்சம் முழுதும்

அவளது நினைவே!

காதலென அறிந்தேன்

காண்பிக்கத் துணிந்தேன்!

மறுத்தவள் அவளால்

மரண வலி(ழி) தெரிந்தது!

கத்திக்குப் பசி

என் கையினைக் கிழித்தேன்!

வழிந்தது இரத்தம்

வந்ததோ அவள் வாசனை!

தெளியா மனநிலை

அவளையே தேடினேன்!

புரியாத குழப்பங்கள்

என்னுள்ளே புதைத்தேன்!

அழியாச்சுவடாய் தினம்

அவள் நினைவையே சுமந்தேன்!

4.பழகப் பழகு

முதியோர் முன் பணிந்து பழகு!

நல்லோர் முன் நினைந்து பழகு!

அறிவுடையார் முன் அறியப் பழகு!

நலிந்தோர் முன் ஏற்கப் பழகு!

வலியோர் முன் வாழ்ந்து பழகு!

எளியோர் முன் கொடுக்கப் பழகு!

உயர்ந்தோர் முன் உயரப் பழகு!

உறவின் முன் உண்மையாய்ப் பழகு!

நட்பின் முன் பகிர்ந்து பழகு!

காதல் முன் கலந்து பழகு!

தீயோர் முன் உணர்த்தப் பழகு!

இயற்கை முன் இரசிக்கப் பழகு!

உணர்வின் முன் மதிக்கப் பழகு!

உலகோர் முன் புகழ்படப் பழகு!

5.சத்தியப் பெண்


சத்திய ஜோதியில்

நித்திய வாழ்வதைப்

புத்தியுள் கொள்பவளே!

தினம் பற்றிடும் நெருப்பென

சுற்றிடும் காற்றென

புதுச் சுடர்தனில் ஒளிர்வாயா!

மங்கல முகத்தினுள்

குங்கும வித்திடும்

மாசறு கன்னியரே!

தினம் எண்ணிய கொடுமைகள்

திண்ணிய மனமதால்

தீயென எரிப்பாயா!

பண்படு மனமெனப்

பாசக் குயிலெனப்

பாடும் பாவையரே!

தினம் கண்தொடும் தூரத்தில்

கொடுமைகள் கண்டால்

கலைந்து எரிவாயா!

புன்னகைப் பூவென

புண்ணியப் பேரெனப்

பூத்திடும் பூமகளே!

தினம் புத்தியில் உயர்வென

பூவல்ல புயலென

புத்தி புகட்டிட மாட்டாயோ!

பொன்னிற மேனியில்

மென்னிறம் சாய்ந்திடும்

பூவிழிப் பேதையரே!

தினம் பொங்கிடும் பாலல்ல

பொறுமிடும் கடலெனச்

சீறிட மாட்டாயோ!

கார்முகில் கூந்தலும்

கருமைக் கண்களும்

கலையுறும் கன்னியே!

தினம் கண்ணில் பாம்பெனக்

காமப் பேய்களை

கொத்திட மாட்டாயோ!

நீரிடை மீன்களாய்த்

தேரிடை நடையிடும்

பார்புகழ் பெண்மணியே!

தினம் பாவிகள் அண்டாது

பாதத்தின் கீழ்க்கொண்டு

நசுக்கிட மாட்டாயோ!

உன்னை நீ உயர்த்திட மாட்டாயோ!

உண்மையை உணர்த்திட

மாட்டாயோ!

6.காதல் சந்நியாசி


காதல் சந்நியாசி!

ஆம்! நான் ஒரு காதல் சந்நியாசி!

காதலில் வென்றதால் அல்ல!

காதலை நான் வென்றதால்!

கடுந்தவம் புரிபவன்!

ஆம்! நான் ஒரு கடுந்தவம் புரிபவன்!

காதல் நினைவுகளைக்

களையாமல் காப்பவன்!

விடாமல் ஜெபி(யி)ப்பவன்!

ஆம்! நான் விடாமல் ஜெபி(யி)ப்பவன்!

என் காதலியின் பெயரை

விடாமல் ஜெபிப்பவன்!

குன்றின்மீது அமரவில்லை!

ஆம்! நான் குன்றின்மீது அமரவில்லை!

இருப்பினும் என் காதல்

குறையவில்லை!

காதல் தவம் புரிபவன்!

ஆம்! நான் ஒற்றைக்கால் காதல் தவம்புரிபவன்!

ஆம்! ஒருதலையாய்க் காதலில்

கடுந்தவம் புரிபவன்!

காதல் சந்நியாசி!

ஆம்! நான் ஒரு காதல் சந்நியாசி!

7.உன்னுள் ஒருவன்


மனிதா! மனிதா! மனிதம் காப்போம்!

மதம் தரும் நெறிகளை உயிரென மதிப்போம்!

மதத்தால் எழும் பேதமை அழிப்போம்!

அன்புதனை எங்கும் அள்ளி விதைப்போம்!

பண்புதனை என்றும் பறிமாறிக்கொள்வோம்!

அறிவுதனை அளவின்றி அள்ளிக்கொள்வோம்!

கண்ணிமைக்கும் நொடியில் கடலையே கடப்போம்!

துஷ்டரைக் கண்டால் தூசியாய் நினைப்போம்!

எதிரியென எவர்வரினும் கடலாய்க் கொதிப்போம்!

சுட்டுவிரல் தொட்டு உலகைச் சுழற்றி விடுவோம்!

தடையொன்று வந்தால் தர்ம அடி கொடுப்போம்!

உயிர்வடியும் நொடியிலும் நாட்டை உயிராக மதிப்போம்!

8.உலகின் இதயம்


பசுமை பாடும் எனது ஊரு

பாடும் பாடல் பாரு!

ஊர் எல்லைக்கோடு பாரு

தூக்கனாங்குருவிக் கூடு

ஊஞ்சலாடும் பனைமரக்காடு!

பரந்த தார்ச்சாலை அருகே

பரவிய புல்வெளியும் பசுமை பாடும்!

திசைகள்தோறும் நிறைந்த கிணற்றில்

நித்தம் நித்தம் இனிமை ஊறும்!

மரங்கள் யாவும் அடர்ந்து உயர்ந்து

மேகத்தோடு உறவாடும்!

கரைகள் அலம்ப நீர் நிறைந்து

வயல்கள் யாவும் பாய்ந்தோடும்!

வளரும் இளம்பயிர் வானம் நோக்கும்

பின்பு விளையும் நெல்மணி பூமி நோக்கும்!

பொன்பாத்திரம் நிறைய பாலைச் சுரக்கும்

பசுச்சாணத்தால் வீட்டு முற்றம் சிரிக்கும்!

பலவண்ணப் பறவைகள் இசைகள் பாட

எழில்வண்ண மயிலும் நடனமாடும்!

ஆட்டுடன் குட்டிகள் குதித்தாடும்

அதை நலமுறக் காத்திட நாய்கள் ஓடும்!

மாதம் ஒரு நங்கை பருவம் ஏற்பாள்

பச்சைத் தென்னங்கீற்றில் வீடு கேட்பாள்!

வம்பை முறித்திடும் வாலிபர் நெஞ்சம்

தினம் கம்பு சுழற்றிக் கவிபாடும்!

சிந்தும் மழையோ என் ஊருக்கு தாரம்

தினம் கொஞ்சித் தழுவிக் குளிரச் செய்யும்!

பசியின்றி சிறுபிள்ளை சிரித்திருக்கும்

இங்கு பால்தரும் தாய்மனம் வெளுத்திருக்கும்!

அவரவர் தொழிலை அவரவர் நோக்க

அவர் துனைவியும் துணை நின்று அவரை நோக்க

அன்பும் பண்ணும் நிறைந்திருக்கும்

வாழ்வில்என்றும் வளமே மிகுந்திருக்கும்!

ஆடி பிறந்தால் தேரோடும்

ஐப்பசி வந்தால் நெல் முளைக்கும்!

தை பிறந்தால் அறுவடையாகும்

தமிழர் திருநாளும் நன்றாய்ப் போகும்!

இங்கு தலைக்கு அணையாய் அருவாக் கம்பு

தாரத்திற்குத் துணையோ கணவனின் அன்பு!

நெல்வளமும் சொல்வளமும் சுரந்து நிற்கும் – அதை

காணும் கவிஞன் மனமோ கரைந்து கவி சுரக்கும்!

9.என்னிடமே நடிக்கிறேன்


கண் காண இயலாக்

காயங்கள் என்னுள்ளே!

கற்பனைக்கெட்டாக் கவிதைகள்

என் மனதினுள்ளே!

தனிமையில் இருந்தால்

காதல் வலி கூடுகிறது!

குழுவாகக் கலந்தால்

சிரிப்பதாய் மனம் நடிக்கிறது!

அவள் ஒவ்வொரு வெறுப்பிலும்

என்னையே வெறுக்கிறேன்!

பார்க்காது அவள் போனால்

இரணமாய்த் தவிக்கிறேன்!

அவள் ஒவ்வொரு பிரிவிலும்

மெழுகாய் உருகினேன்!

உயிரிழந்த பொம்மைபோல்

சுவரிலே சாய்கிறேன்!

அவளை மறந்ததாய்க் காட்டிக்கொண்டு

என்னிடமே நடிக்கிறேன்!

தினம் ஒவ்வொரு நொடியிலும்

உயிர் பறிப்பதாய்த் துடிக்கிறேன்!

10.உயிர் தந்த உயிர்


பெண்கள் தேடும் இலக்கணமே

அனைவர் உள்ளம் வாழும் பொன்வீடே!

அன்பென்ற உடலுக்கு உயிர் நீயே

பண்பென்று சொன்னால் என் உயிர்த்தாயே!

வேறென்ன வேண்டும் சொல் நீயே – என்றும்

என் உயிரும் உடலும் நீயே! நீயே!

11.எழுவோம்


விழுந்தாலும் மழையாகி

மண்ணுக்கு இரையாவோம்!

புதைந்தாலும் விதையாகி

மரமாக நாம் எழுவோம்!

பகை முட்டச் சினந்தாலும்

நெருப்பாய் எரிந்தே சினப்போம்!

நின்றாலும் விழுதூன்றி

வலிய மரமாய் நிற்போம்!

வளைந்தாலும் வில்லாகி

அம்பாய்ப் பாய்வோம்!

பறந்தாலும் கழுகுபோல்

கர்வத்தோடு பறப்போம்!

நடந்தாலும் நதிபோல

நலன் செய்ய நடப்போம்!

பாய்ந்தாலும் புலிபோல

இலக்கோடு பாய்வோம்!

அடித்தாலும் புயல்போல

ஆக்ரோசமாய் அடிப்போம்!

சாய்ந்தாலும் ஏணிபோல்

பிறர்வாழச் சாய்வோம்!

சிரித்தாலும் அலைபோல

கலகலவென சிரிப்போம்!

குதித்தாலும் அருவிபோல்

குருதி துடிக்கக் குதிப்போம்!

மறித்தாலும் மலைபோல்

மனம் தளராமல் மறிப்போம்!

எவர் வந்து எதிர்த்தாலும்

எரிமலையாய் வெடிப்போம்!

வீழ்ந்தாலும் நெஞ்சில்

வீரத்தோடு வீழ்வோம்!

மீண்டும் பிறந்தாலும்

இந்தியனாய்ப் பிறப்போம்!

12.வாசனையும் வலியும்


சாவாது வாழ்வதால்

நான் சாமியார் அல்ல!

காதலில் புரியாது வீழ்ந்ததால்

நான் பைத்தியம் அல்ல!

சோர்ந்து உடைய

நான் சோம்பேறி அல்ல!

தத்துவம் விடுப்பதால்

நான் ஞானியும் அல்ல!

வரிகளை விதைப்பதால்

நான் கவிஞனும் அல்ல!

நடந்ததை மறக்க

நான் நடிகனும் அல்ல!

அறிந்தே புதைத்தவன்

என் மனதிலே மறைத்தவன்!

என்னையே தொலைத்தவன்

எண்ணத்துள் மலர்ந்தவன்!

பூமகள் அவள் நினைவோடு

புனிதனாய் அலைகிறேன்!

வஞ்சி அவள் வாசனையால்

வலிகள்தான் மிகுதி!

13.ம(வ)ரம்


வானும் மண்ணும் மேல் கீழாய் – நீ

மண்மீது முளைத்தாய் சிறு கன்றாய்!

வான்தந்த பெருமழை நீ கொண்டாய் – பின்பு

வளர்ந்து நின்று செடி என்றாய்!

கால்களாய் வேர்கள் பல நீ கொண்டாய் – பின்பு

வளர்ந்து நிற்க மரம் என்றாய்!

தலைதனில் வெயில்தனைத் தாங்கி நின்றாய் – உன்

நிழல்கீழ் நறுமணக் குளிர் தந்தாய்!

எனைப்போல் உனைப்பாடும் உயிர்களுக்கும்

பருந்துக்கும் குயிலுக்கும் இடம் தந்தாய் – பின்பு

பருத்த மரமாய் நீ நின்றாய்!

வறண்ட உன் தாய் வயிறு குளிர்ந்திடவே – நதி

வற்றாமல் உனைக் காக்க மழை தந்தாய்!

எழும் எமது பாரதம் வளர்ந்திடவே – நீயும்

எத்தனை தத்துவமாய் தழைத்து நின்றாய்!

14.நானாக வேண்டும்


திடத்தினால் நெகிழும்

திறமையான உள்ளம் வேண்டும்!

கடும் உழைப்பினால் உயரும்

சோர்வறியா தேகம் வேண்டும்!

வறுமையில் மடியாத

நல் மனது வேண்டும்!

பொறுமையில் குறையாத

நல்ல பணிவு வேண்டும்!

தீயதை எண்ணாத

நல் சிந்தை வேண்டும்!

அடுத்தவர் மேல் பழிகூறா

நல் நாக்கு வேண்டும்!

தன்னையே தான் திருத்தும்

புதுச் சக்தி வேண்டும்!

மாயை கண்டு மயங்கிடா

நல் புத்தி வேண்டும்!

வேசமிடும் வெறிநாய்களை

வேரறுக்கவேண்டும்!

கொடுமை கண்டு அடங்கிடாத

கோபம் வேண்டும்!

திறமையைக் கொன்று புதைத்திடாத

வலிமை வேண்டும்!

தினம் எளிமை என்னும் தோலை

என்னுடல் ஏற்க வேண்டும்!

சதிகள் என்னும் பிணியில் சிக்கா

சாதனைகள் வேண்டும்!

வெறுமையான கவர்ச்சிக்கு

வெந்தொழியாக் கண்கள் வேண்டும்!

காண்பதைத் தெளியும்

நல் அறிவு வேண்டும்!

புகழுக்கு ஏங்கிடா

நல் புத்தி வேண்டும்!

பலனை நோக்கிடா

நல் பக்தி வேண்டும்!

எமனையும் எதிர்க்கின்ற

எண்ணம் வேண்டும்!

எவரையும் ஜெயிக்கின்ற

நற்புலமை வேண்டும்!

போதைக்கு மயங்கா

புரிதல் வேண்டும்!

தாரம் மட்டும் தழுவும்

தலைமை வேண்டும்!

பெண்ணைத் தரம் தாழ்த்தா

ஆண்மை வேண்டும்!

ஆன்மீகம் யாதென

அறிய வேண்டும்!

சதியெனும் தீயில் விழா

மதிகொள்ள வேண்டும்!

சமத்துவச் சமதளத்தில்

வாழ்வமைய வேண்டும்!

எம் மனது சுத்தத்தால் பொங்கிடவே

நான் என்றும் நானாக வேண்டும்!

15.இரும்பு இதயம்


காதல் ஒரு கள்ளிச்செடி – அதில்

கைகள் பட்டதால் காயமடி!

நெஞ்சம் ஒரு நெருஞ்சிலடி – அதில்

நெருப்புத் துகள் பறக்குதடி!

உன் பார்வை ஒன்றே போதுமடி – என்

ஏழு ஜென்மம் அதில் உறையுமடி!

பிடிக்கும் என்று சொல்வாயடி – அந்த

சொல்லில் என் வாழ்வும் கழியுமடி!

என்னதான் உன் நினைப்புமடி – என்னை

ஏற்க உன்மனம் மறுக்குதடி!

உன் இதயம் இரும்பாய்ப் போனதோடி – இப்படி

இருகிப்போய் துடிக்குதடி!

என்ன பாவம் செய்தேனடி – இப்படி

இரும்பைக் காதல் செய்தேனடி!

16.பதிலின் கேள்விகள்


புத்தியுள் புதைந்த புதையலோ – இல்லை

புனிதங்கள் பிறப்பெடுக்கும் பொற்கடலோ!

மனிதனின் அழியாக் காவலனோ – இல்லை

திறமைகள் வாழும் போர்த்திடலோ!

பழைய நினைவுகளின் கல்வெட்டோ – இல்லை

புதிய வளர்ச்சியின் உயிர்மொட்டோ!

அறிவுகள் அடங்கிய பேரண்டமோ – இல்லை

அகிலம் ஆளும் நுண்பொருளோ!

எல்லோர் மூளையிலும் உன் பிறப்போ – இல்லை

வாழ்கையின் அர்த்தங்கள் உன் உறுப்போ!

சிந்தனை என்பதே உன் பெயரோ – இல்லை

மனிதனை சிற்பம் ஆக்குவதே உன் தொழிலோ!

17.அவ(ள்)ப் பெயர்


துள்ளி விளையாடிய கயல்விழிப் பேதை – நீயே

புது மஞ்சள் அரைத்துப் பூசிய பூவாய் மலர்ந்தாயே!

தென்றலுக்கு நேர் நிகராய்ப் பறந்தவளே – நீ

தெய்வத்தின் உருவாய் உலகில் பிறந்தவளே!

பசுமையும் பாரதமும் பெண்ணே நீயே – நீ

பட்ட கஷ்டமெல்லாம் போதும் கண்ணே!

எதற்காக உனக்கின்று வெள்ளை உடை – நீ

வெளுத்த சாம்பலாய்ப் போன கதை!

இன்று பூத்த மலர்களெல்லாம் உதிர்ந்தனவோ – உன்

கூந்தலில் மலர் ஏறாக் காரணம் ஏதோ?

உணவின்றி உன்னுடல் மெலிந்ததுவோ – உன்

கைவளையல் கழன்று விழும் காரணமோ!

எதற்காக உன் கண்ணில் நீர்த்துளி – உன்

வாழ்கை இருண்டதென்பதா உந்தன் வ(ழி)லி!

வண்ணங்கள் யாவும் வறண்டதுவோ – அவை

உன்னை வருணிக்க வராத காரணமோ?

விதவை என்பதே உன் பெயரோ – இதுவே

உனக்குக்கிழைத்த அவப்பெயரோ?

பிறந்ததும் தொடர்ந்தது உன் மஞ்சள் முகம் – அது

பாதியில் மறைந்த மாயம் என்ன?

அடுத்தவர் மடமைக்குச் செயல் நீயோ – இனி

அடுப்பறை மட்டும்தான் உன் வீடோ?

புதியதோர் சிந்தனை வேண்டாமோ – நீ

பூமிக்குப் புத்தி புகட்டிட வேண்டாமோ?

இடையில் வந்தவன் கணவன் – அவன்

எப்படி உன் மங்கலம் எடுத்துச் செல்வான்!

இறந்த கதையோ அவனின் பாடு – இறுதியில்

உனக்கேன் விதவைக் கோட்பாடு!

பெற்றவள் தந்தது குங்குமமே – அது

உற்றவன் போனால் மறைந்திடுமோ?

என்ன நியதியென இதை ஏற்றாய் – ஏன்

நெருப்பிடம் பஞ்சாய் நீ தோற்றாய்!

தந்தை தந்தது கைவளையல் – அது

கணவன் போனால் கழன்றிடுமோ?

நீ அரைத்துப் பூசிய மஞ்சள் துளி – அது

மணாளன் மறைந்தால் மங்கிடுமோ?

பிறந்த போதே கிடைத்ததிது – பிறகு

எப்படி இடயில் தொலைந்ததிது?

பிறர் ஆட்டிய கோணத்தில் ஆடுகிறாய் – பின்

வாடிய முகத்தோடு சாகுகிறாய்!

மங்கலம் யாவும் உன் பொருளே – அதில்

கணவனும் சிறு உயிர்ப்பொருளே!

இடையில் சேர்ந்த மங்கலமே – அவன்

பாதியில் போனால் போகட்டுமே!

உலகத்தின் படைப்பெல்லாம் உந்தன் அளிப்பு – இனி

உனக்கு இல்லையெனில் எதற்கிருக்கு!

ஆண் அவன் போனால் அமங்கலமோ – அவனே

இழந்து போனான் மங்கலத்தை!

ஏனடி சோகம் உந்தன் முன்னே – புது

மங்கலச் சுடரென ஒளிரடிக் கண்ணே!

18.உயிர்குடிக்கும் உணர்வுகள்


என் உயிரில் கலந்த உயிர்த்துளியே

உயிரை முட்டிக் கொல்லாதே!

நினைவில் மலரும் பெண்மலரே

வாசம் வீசிச் சாய்க்காதே!

கனவில் மிளிரும் வெண்நிலவே

இரவைப் பகலாய் மாற்றாதே!

இமையுள் புகுந்த ஒளி விளக்கே

கண்ணில் நீராய்க் கரையாதே!

உணர்வில் நிறைந்த உன்னதமே

உடலில் முள்ளாய்க் குத்தாதே!

கவியால் வரைந்த ஓவியமே

என்னைக் கற்பனைக் கடலில் தள்ளாதே!

உயிரைக் குடிக்கும் என்னுயிரே

எனைக் காலம் தாழ்த்திக் கொல்லாதே!

19.பைத்தியக்காரன்


உலகை ஆளும் கடவுளுக்கு

உணவு உருண்டை படைக்கிறான்!

உலகம் முழுக்க நிறைந்த செல்வம்

தனக்கே கிடைக்க நினைக்கிறான்!

கையை ஏந்தும் மனிதனிடம்

கையை ஓங்கிக் காட்டுகிறான்!

கையைக் காட்டும் கடவுளுக்கோ

காசை அள்ளிக் கொட்டுகிறான் – மனிதன்

பணமிருந்தும் பிச்சை எடுக்கும்

பைத்தியாமாய் அலைகிறான்!

20.கலங்காதே


கண்ணே கண்ணே கலங்காதே

காதலி வருவாள் கலங்காதே!

கரையா மனமென்று ஏதுமில்லை

கவிதைக்கு மயங்காப் பெண்ணுமில்லை!

சொல்லால் தொடுத்த முதல் கவிதை

அதை வில்லாய் வளைத்து நீ அனுப்பு!

நன்னாள் ஒன்றில் வரம் தருவாள்

உன் பின்னால் அவளே வலம் வருவாள்!

கண்ணில் மலரும் நினைவுகளே

உன் கண்ணீர்த் துளிக்குக் காரணமோ?

கண்ணீர்த்துளி வெறும் துளியல்ல

உன் வலியைத் தழுவும் மருந்தாகும்!

அவள் நினைவை மட்டும் தொலைக்காதே

அவளைக் கனவில் காண மறுக்காதே!

கண்ணே கண்ணே கலங்காதே

காதலி வருவாள் கலங்காதே!

21.உயிர் தந்தாய்


கனவிலும் நீயே! நினைவிலும் நீயே!

கவிஞனின் ஒவ்வொரு அசைவிலும் நீயே!

சொல்லிலும் நீயே! செயலிலும் நீயே!

என் உயிர் ஓடும் ஒவ்வொரு நரம்பிலும் நீயே!

உணர்வுகள் நீயே! என் உயிரும் நீயே!

தாயும் நீயே! தகப்பனும் நீயே!

சிந்தையும் நீயே! என் விந்தையும் நீயே!

அன்பும் நீயே! அறமும் நீயே!

அறிவும் நீயே! அழகும் நீயே!

கனியும் நீயே! என் காதலும் நீயே!

எண்ணக் கறைத் துடைக்கும்

வண்ணக் கரமும் நீயே!

என் கவிதைக்குள் தமிழாய்

உயிர் தந்தாயே!

22.மனமே வரம்


நல்லதொரு எண்ணம் தாராய்

நாளுமதை நான் தொடர நல்லுள்ளம் தாராய்!

பொங்கி எழும் கோபம் நீக்குவாய்

நற்பண்பினிலே என் வாழ்வைப் போக்குவாய்!

சிந்தையுள் நல்லறிவைத் தாராய்

அதை அகிலம் நிறைய அள்ளித் தாராய்!

ஆணவம் அதை நீயே அழைத்துச் செல்வாய் – அது

அருகில் வாராது நீயே அறிவுரை கூறுவாய்!

தீமையற்ற நற்செயலைத் தாராய்

அதைத் திண்ணிய என் மனம் திண்ணத் தாராய்!

நல் வாழ்வின் வழிப் பயணம் தாராய் – அதில்

நச்சுப் பாம்புகள் அண்டாது அணைத்துக் காப்பாய்!

துயரமதை நீயே நீக்காய்

திறத்தினால் எம் மனதை திடமுற ஆக்காய்!

பேராசை இல்லாத வாழ்வைத் தாராய்

அது அணுவளவும் நுழையாது சூழ்ந்து நிற்பாய்!

இரக்கமதை என்னுள்ளே விளையச் செய்வாய்

அதில் மேன்மேலும் ஏற்றம் பல புரியச் செய்வாய்!

தடைகளைத் தாண்டிடும் பாதம் தாராய்

பல சரித்திரம் படைத்திடும் கரங்கள் தாராய்!

தீயோர் பார்வையைத் தீய்த்திடுவாய்

பல நல்லோர் பார்வையை நல்கிடுவாய்!

உதவும் எண்ணம் என்னுள் உறையச் செய்வாய்

அந்நொடியில் ஊற்றாய் பெருகச் செய்வாய்!

நெறிகளை நெற்றியில் ஒளிரச் செய்வாய்!

நெறியோடு என் வாழ்வைத் தொடரச் செய்வாய்!

ஒழுக்கத்தை என்னுள் ஓங்கச் செய்வாய்

அதில் ஒருநாளும் ஒழுகாது உறையச் செய்வாய்!

பண்புகளை என்மீது படரச் செய்வாய்

அதில் பாசம் கலந்த பசுமை தாராய்!

காலத்தைக் கடக்கும் கால்கள் தாராய்

நல்ல காரியம் முடிக்கும் திறனைத் தாராய்!

நல்வழி பிறழா உள்ளம் தாராய்

அதில் நாளும் நான் பிறழாத வரமும் தாராய்!

செழுமை மிகுந்த சிந்தனை தாராய்

நாளுமதை சிறப்போடு சிறக்கச் செய்வாய்!

தூய்மையின் வாழ்விடமாய் என்னை ஆக்கிடுவாய்

எத்துயர் வந்தாலும் அதை – நீயே

அடித்துப் போக்கிடுவாய்!

மனமே எல்லாம் நீயே ஆவாய்!

23.ஊமை வார்த்தைகள்


கற்பனைக்கு எட்டாக் கனவுகளால் – என்

இரவுகள் களவு போனது!

எரிச்சலாய்ப் பார்க்கும் அவள் விழிகளால் – என்

உறக்கங்கள் கருகிப்போனது!

என்னைப் பார்த்ததும் மறையும் அவள் சிரிப்பால் – என்

கண்களில் மழை வந்தது!

உறவற்ற தொலைவில் அவள் இருப்பதால் – என்

உயிர் உருகிக் கசிந்தது!

என் பெயரையே உச்சரிக்கா அவளால் – என்

வார்த்தைகள் ஊமையானது!

என்னைச் சிறிதும் நினையா அவளால் – என்

உடல் மெலிந்து உருவிழந்தது!

தினமும் அவளையே நான் நினைப்பதால் – என்

மதியும் அவள் முழுமதியுள் தொலைந்தது!

24.சத்தமின்றிப் பேசுவாய்


வாழ்வின் பொருள்தனை விளங்கச் சொன்னாய்

பல சரித்திரங்களை விளக்கிச் சொன்னாய்!

உலகின் வளர்ச்சிக்குத் தூணாய் நின்றாய்

உண்மை எதுவென உறக்கச் சொல்வாய்!

உயிரோடு ஒன்ற நடந்து வந்தாய்

பல கவிகளில் என்மனதைக் கவர்ந்து நின்றாய்!

அறமும் நெறியுமாய் அள்ளித் தந்தாய்

அதைப் பொருள் விளக்கிப் புரியச் செய்தாய்!

உலகம் யாவும் நீயே உள்ளாய்

உலக இரகசியம் உனக்குள் கொண்டாய்!

பழையன வாங்கிப் புதியன தந்தாய்

அதில் புதிது புதிதாய்ச் சிந்தனை தந்தாய்!

மௌன மொழியால் என்னுடன் பேசுவாய்

என்னை உணர்த்த உன்னைக் காட்டுவாய்!

வாய்விட்டுச் சொல்லாமல் சொல்லி நீயும்

பாலூட்டும் அன்னைபோல் பார்த்துக்கொள்வாய்!

புத்தகம் என்ற பெயரில் வந்தாய்,

எந்த(ன்) பிறப்பிற்கும் நீயே அர்த்தம் தந்தாய்!

25.புறப்படு தமிழா


புறப்படு தமிழா புறப்படு

புதிய ஈழம் படைத்திடப் புறப்படு!

எதிர்ப்படும் தடைகளைத் தகர்த்திடு – நீ

எதிரிகள் இல்லாமல் அழித்திடு!

படையுடன் நடையைச் செலுத்திடு

கெட்ட பகைவரை நோக்கி விரைந்திடு!

தமிழுக்கோர் நியதி கேட்டிடு – நீ

தமிழன் என்பதைக் காட்டிடு!

புறப்படு தமிழா புறப்படு

புதிய ஈழம் படைத்திடப் புறப்படு!

நரகம் அழித்திடப் புறப்படு

நல்ல நகரம் ஆக்கிடப் புறப்படு!

விழிப்புடன் நீயும் இருந்திடு

கெட்ட விரோதி அழிக்கத் துணிந்திடு!

அவன் செய்த பாவம் உணர்த்திடு

இப்பாரினை விட்டுத் துரத்திடு!

பாவையர் போற்றிய மானத்தை

பாவி அழித்தான் புறப்படு!

இருளின் அரக்கனை எரித்திடு

நாளைய விடியலை நமதாய் ஆக்கிடு!

புண்ணியத் தலங்களும் இடிந்தனவே

எம் தமிழும் புண்ணாய்ப் போனதுவே!

கன்னியர் கற்பும் சிதைந்ததுவே

நம் கல்விச் சாலையும் இடிந்ததுவே!

புறப்படு தமிழா புறப்படு – நீ

பொறுத்தது போதும் புறப்படு!

எதிர்த்திடு தமிழா எதிர்த்திடு – நீ

சகித்தது போதும் எதிர்த்திடு!

ஒவ்வொரு கையாய் இணைத்திடு – அதனை

உலகம் காண உயர்த்திடு!

இருளைத் திரியாய் மாற்றிடு

நாளைய விடியலை சுடராய் ஏற்றிடு!

26.நீயே என் காதலி


‘பூ’ மேல் பனித்துளி

உன்மேல் என் விழி!

என் விழிமேல் நீர்த்துளி

காரணம் உன் விழி!

காலத்தின் நீள் ஒளி

என் காதலின் தொடர்ப் புள்ளி!

மேகத்தின் கண்ணீர்த்துளி

அது பூமிக்குச் சிரிப்பொலி!

காதலால் நெஞ்சில் வலி

என் வருனணையோ மின்னல் ஒளி!

என்மேல் எத்தனைக் கடும்பலி

இருப்பினும் நீயே என் சுவாச வளி!

காதல் ஓர் வரிப்புலி!

என்மேல் பாய்ந்ததால்

நான் கவிதையில் புலி!

என்றும் நீயே என் காதலி!

27.வசதியான வறுமை


குடும்பத்துக்குத் தலைவன் நான்

நல்ல தலைவிக்கும் – நான்

கணவன் தான்!

ஊரைச் சுற்றி வந்தேன்

தினம் ஊரைச் சுற்றி

வந்தேன்!

காசு பணம் சேர்க்க எண்ணி கால்நடையாப் போனேன்

காசு எல்லம் கனவாகக்

கண்ணீரோடு வந்தேன்!

உலகளவு உழைத்தாலும் கடுகளவு கூலி

ஏழை நானும் யாரைக் கேட்க

என்னதாண்டா வழி?

கையில் பட்ட காசை நல்ல கணவனாகக் கொடுத்தேன்

காலைப் பார்த்த மனைவி – அதைக்

கையில் திருப்பிக் கொடுத்தாள்!

காலு தேய்ந்துபோன பின்னே செருப்பு எதுக்கு போடி

நாளை காலம்தள்ள வேணுமே

காசைப் பிடிச்சுக்கோடி!

பசியில் தூங்கும் பிள்ளை விழித்தால் பாலு இல்லை

அதைப் பார்த்து அழுகக்கூட – நமக்கு

கண்ணீரும் மிச்சம் இல்லை!

குடும்பத்துக்குத் தலைவன் நான்

நல்ல தலைவிக்கும் – நான்

கணவன் தான்!

28.உயிருக்குள் அறிவு


மனிதருள் எவரும் முட்டாளும் இலர் – எல்லாம்

அறிந்த ஞானியும் இலர்!

நீ அறிந்ததை பிறர் அறியார் – பிறர்

அறிந்ததை நீ அறியாய்!

உன்னை முட்டாளெனச் சொல்வார் – அவர்

முழுதும் அறிந்தார் இலர்!

அறிஞர் எனச் சொல்ல – எவரும்

அகிலத்தையே உணர்ந்தாருமிலர்!

கருவினுள் உறங்கக் கற்றாய் – இந்தக்

கலியுகத்தில் வாழக் கற்றாய்!

ஒவ்வொரு அசைவிலும் உண்மையைக் கற்றாய் – தினம்

நல்லது தீயதை அறியக் கற்றாய்!

நாடெங்கும் நடப்பதைத் தெரியக் கற்றாய் – எங்கும்

பொருளோடு சொல்லைப் பேசக் கற்றாய்

பிறரோடு நட்புடன் பழகக் கற்றாய் – பிறர்

உணர்வுகளை மதிக்கக் கற்றாய்!

கருவினுள் குழந்தைபோல் உறங்கவில்லை – உன்

பெயரும் முட்டாள் இல்லை!

சான்றிதழ் பெறுவதே கல்வி என்றால் – முழுதும்

கற்றவர் உலகில் இல்லை!

அனுபவமே கல்வி என்றால் – உலகில்

கற்காதவரென எவரும் இல்லை!

ஒவ்வொரு நொடியும் கழியும் போது – நீ

புதிதாய் ஒன்றைக் கற்கின்றாய்!

ஒவ்வொரு செயலின் முடிவிலும் – நீ

உண்மை எதுவென உணர்கின்றாய்!

நல்லது எதையும் நினைப்பாய் – அதைத்

திடமுறத் திறத்தால் முடிப்பாய்!

29.மலருக்குள் வண்டு


பசுந்திரள் நிறைந்த தாவரமோ – நீ

என் பார்வையில் படிந்த பொன்னிறமோ!

நீல வானில் கசிந்த முதல் துளியோ – நீ

என்மேல் விழுந்த முதல் மழையோ!

புன்னகை சொரியும் வெண்நிலவோ – நீ

மலர்காளால் நிறைந்த பொற்குளமோ!

வைகறைப் பொழுதின் வெண்பனியோ – நீ

என்னுடல் சிலிர்த்த முன்பனியோ!

கடலினுள் அலைகள் உன் சிரிப்போ – நீ

கலங்கம் இல்லாப் பொன் விளக்கோ!

கவிதைகள் ஆனது உன் சிரிப்போ – நான்

கவிஞன் ஆனதும் உன் நினைப்போ!

வண்ணம் நிறைந்த மலரே – இந்த

வண்டிற்கும் அங்கோர் இடமுண்டோ?

30.ஆண்டவனும் குற்றவாளி


நல்லவன் எவனும் இல்லா நாறும் உலகம் இது!

இங்கு கடவுள்கூட கெட்டவன் வரிசையில்

முதலில் நிக்குது!

தவறு செய்யும் மனிதரெல்லாம் சொகுசா வாழ்கிறான்!

அதைக் தட்டிக் கேட்கா(டா)

கடவுளும் குற்றவாளி ஆகிறான்!

தப்பு செய்தால் கொடுப்பதோ குறைந்த தண்டனை!

தப்பு செய்யத் தூண்டினால்

அதிகத் தண்டனை!

தினம் தப்பு செய்யத் தூண்டிடும் உலகம் இது!

இதை தட்டிக் கேட்கப் போவது

யாரு அது!

ஒருவன் செய்யும் தவறைப் பார்த்து

இன்னொருவன் செய்கிறான்!

ஒவ்வொருவனுமே ஒரு தவறைப்

புதிதாய் செய்கிறான்!

யாரு என்ன ஆனா என்ன – ஒருத்தன்

ஒதுங்கிப் போகிறான்!

மானங்கெட்டவன் அவந்தானே

மறைந்து வாழ்கிறான்!

ஆகமொத்தம் எல்லோருமே குற்றவாளிடா!

ஆண்டவனும் நமக்கு முன்னே

நிற்கிறானடா!

31.பெண்மையும் உண்மையும்


பெண்ணே சொல்லடி – ஓர்

உண்மை சொல்லடி!

அடி பெண்ணே சொல்லடி – உந்தன்

சக்தி என்னடி?

கார்முகில்போலே கரைந்தொழுகும்

பெண்ணே சொல்லடி!

நீ கடல் கடலாய் கண்ணீர் சிந்தும்

காரணம் என்னடி?

நீரில் விழும் நெருப்பாக

நித்தம் அணைகின்றாய்!

புயலில் விழும் பூவாக

நித்தம் துடிக்கின்றாய்!

புன்னகை முகமே அதை நீயும்

புழுதியில் புதைக்கின்றாய்!

கன்னியப் பெண்ணும் நீயாவாய் – ஏன்

கண்ணீர் வடிக்கின்றாய்!

தென்பனிச் சாரலாய் – நீயும்

தேகம் சிலிர்க்கின்றாய்!

பின்பனிச் சாரலாய் ஆனதுபோலே

பிறந்து இறக்கின்றாய்!

மதிகெட்ட மனிதர் முன்பு

மறுகி நிற்கின்றாய்!

பின் சிறைப்பட்ட கிளியாக

சிக்கித் தவிக்கின்றாய்!

குறைபட்ட வாழ்வோடு

குலுங்கி அழுகின்றாய்!

பின் கரைப்பட்ட கனவோடு

கரைந்தே போகின்றாய்!

பெண்ணே சொல்லடி – ஓர்

உண்மை சொல்லடி!

அடி பெண்ணே சொல்லடி – உந்தன்

சக்தி என்னடி?

பெண்ணே சொல்கிறேன் – ஓர்

உண்மை சொல்கிறேன்!

அடி பெண்ணே சொல்கிறேன் – உன்

சக்தியைச் சொல்கிறேன்!

கார்முகில்போலே கரைந்தொழுகா

வண்ணம் சொல்கிறேன்!

நீ கடல் கடலாய் கண்ணீர் சிந்த

வேண்டாம் என்கிறேன்!

பூமகளே உன்னை நானும்

போற்றிச் சொல்கின்றேன்!

தேன்கனியே உன்னுள் வாழ்வை

தேடல் கொள்கிறேன்!

தாயும் நீயானாய் – பெண்ணே

தங்கையும் நீயானாய்!

தோழி நீயானாய் – பெண்ணே

துணைவியும் நீயானாய்!

நீரும் நெருப்புமாய் நிறைந்த உலகின்

பொருளும் நீயானாய்!

நிலையற்ற வாழ்வில் நிம்மதி கொடுக்கும்

பெண்ணும் நீயானாய்!

இன்னும் ஏனடி – பெண்ணே

இந்த சோகம் சொல்லடி!

கடுங்குளிரினுள் கதிரவனாய் – நீயும்

காட்சி கொள்ளடி!

இனி வாழ்வு எங்குமில்லை – அது

உந்தன் கையிலடி!

அதை வசந்தமாக்குவது – இனி

உந்தன் பெண்மையடி!

32.நசுங்கும் பூ


மெல்லிதழ் நழுவும் புன்னகையே – என்னை

மெல்லமெல்லக் கொல்லாதே!

கண்களில் உறங்கும் கண்ணிமையே – என்னை

காலனிடத்தில் தள்ளாதே!

புல்வெளி தவழும் கால்கொலுசே – அவள்

மென்மை பாதத்தால் மயக்காதே!

காதினில் உறங்கிடும் கம்மலே – என்னை

கதிர்களின் ஒளிகொண்டு எரியாதே!

மூக்கினில் மிளிரும் மூக்குத்தியே – அவள்

மூச்சோடு என்னை இழுக்காதே!

கைகளில் நழுவும் வளையல்களே – அவள்

கல கல ஒலியால் சாய்க்காதே!

புன்னகை சிதறும் பூங்குயிலே – என்

மனதைப் பூவாய் நசுக்காதே!

33.முடிச்சு


ஒருவன் இன்றி இன்னொருவன் இல்லை

புரிந்துகொள்ளடா – மனிதா

புரிந்துகொள்ளடா!

நம்மில் மனிதம் அன்றி மிருகம் வேண்டாம்

உணர்ந்துகொள்ளடா – மனிதா

உணர்ந்துகொள்ளடா!

இரவும் பகலும் எதிரி இல்லை

அறிந்துகொள்ளடா – மனிதா

அறிந்துகொள்ளடா!

சாதி பேதம் பேசவேண்டாம்

மாற்றிக்கொள்ளடா – மனிதா

மாற்றிக்கொள்ளடா!

உடலும் உயிரும் உனதே இல்லை

தெரிந்துகொள்ளடா – மனிதா

தெரிந்துகொள்ளடா!

நிறத்தில் உதிரம் வேறு இல்லை

பார்த்துக்கொள்ளடா – மனிதா

பார்த்துக்கொள்ளடா!

உழவன் இன்றி உணவு இல்லை

உயர்வு ஏதடா – மனிதா

தாழ்வு ஏதடா!

ஒன்று வேண்டின் அன்றே பெற

ஒருவன் வேணுமடா – மனிதா

இன்னொருவன் வேணுமடா!

பிறர் உதவி இன்றித் தானே வாழ

நீ கடவுள் இல்லையடா – மனிதா

கடவுள் இல்லையடா!

இதில் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை

உற்றுப்பாரடா – மனிதா

உற்றுப்பாரடா!

நாம் அனைவருமே பாரதத்தாய்

பிள்ளைதானடா – மனிதா

பிள்ளைதானடா!

அறிவிருந்தால் அதை நீயும்

ஒத்துக்கொள்ளடா – மனிதா

ஒத்துக்கொள்ளடா!

34.உயிரும் உணர்வும்


கண்முன் நடக்கும் சதிகண்டு நின்றிட – நாம்

கற்சிலை இல்லை!

கொடுமைகள் கண்டும் சகித்துப் போகிட – நாம்

அடிமைகள் இல்லை!

ஊழல் கண்டும் குமுறாதிருக்க – நாம்

உறங்கும் எரிமலை இல்லை!

பொருளில் தரமின்மை பொறுத்துப்போகிட – ஒன்றும்

பொருக்கிய காசு இல்லை

நம் உழைப்பினை அடுத்தவன் சுரண்டிட – நாம்

பாரமேற்றும் கழுதையும் இல்லை!

அடுத்தவர் பேச்சினில் நம்மை தாழ்த்திட – நாம்

தரம் கெட்டுப் போகவில்லை!

காசு பணத்திற்கு கண்ணீர் சிந்திட – நாம்

கையொடிந்து போகவில்லை!

ஏய்ப்பவர் ஏய்த்திட இறங்கிப் போவதற்கு – நாம்

ஈனப்பிறவி இல்லை!

அடுத்தவர் அடிகண்டு அஞ்சிக் குனிந்திட – நாம்

நோய்வாய்ப் படவும் இல்லை!

பார்ப்பவர் சிரித்திடப் பாரினில் பிறந்திட்ட – நாம்

கோமாளி மனிதரில்லை!

கேட்பவர் கேள்விக்குப் பதிலாய்ப் போக – எவரும்

கொட்டித் தரவும் இல்லை!

இன்னல்கள் வரும்நொடி இறக்க நினைத்தால் – நாம்

பிறந்ததில் அர்த்தம் இல்லை!

இளைஞரகள் நாமே – நம்

கண்மூடிக் கிடந்தால்

இங்கு நடப்பதை யார் அறிவார் – உலகம்

அழிவதை யார் தடுப்பார்?

திரியென எரிந்தும் மெழுகெனக் கரைந்தும் – புதுச்

சுடர்தனில் ஒளிர்வோமே!

சிறு பொறிதனில் முளைத்திட்டு – இருள்தனை

அழித்திட்டக் கதிரவன் ஆவோமே!

35.முத்தத்தில் மோட்சம்


அன்புகொண்ட உள்ளமொன்று

இல்லையென்று சொன்னதென்று!

வெம்புகின்ற நெஞ்சமொன்று

வேதனையில் தவிக்கிறது இங்கு!

உள்ளத்தில் காதல்கொண்டு

உறக்கத்தைத் தேடுது இங்கு!

முத்தத்தில் வாழ்வைத் தந்து

காதல் மோட்சத்தில் தள்ளிவிடு!

36.நல்ல வயசு


வயசு இது – தம்பி

நல்ல வயசு இது!

தானே வாழத் தொடங்கும்

வயசு இது!

சொன்னால் நீயும்

புரிஞ்சுக்கணும்!

இல்லை நல்லா பட்டு

திருந்திக்கணும்!

உள்ளதை மறைத்து பொய்யைக் காட்டும்

உலகம் இது!

நீயும் உள்ள புகுந்து உண்மையைப் பார்த்தால்

புரியும் அது!

நான்கு பேரு கூட்டுச் சேர்ந்தால்

எல்லாம் தோணுமடா!

மதுவில் தொடங்கி மாது வரைக்கும்

பழகச் சொல்லுமடா!

மனது போகும் போக்கினிலே

மதியும் போகணும் – இல்லை

மத்தவன் பேச்ச கேட்டுப்போகும்

செம்மறி ஆடா அலையணும்!

புகழென்ற நினைப்பில் – நீயும்

போதைக்குள் வாழுவாய்!

கதா நாயகனாய்த் தன்னை நினைக்கக்

காதல் செய்வாய்!

தன்னை மறந்து உன்னை இழந்து

நல்லா சுற்றுவாய்!

தடுக்கி விழுந்து உன்னை உணர்ந்தால்

அழுது புலம்புவாய்!

இந்த வயசு எல்லாம் சொல்லும் – நீ

ஏமாளி தம்பி!

உள்ளதைப் பார்த்து உலகம் புரிந்தால் – நீ

கோமாளி இல்லை தம்பி!

வயசு இது – தம்பி

நல்ல வயசு இது!

தானே வாழத் தொடங்கும்

வயசு இது!

37.ஏமாளியும் கோமாளியும்


ஜனநாயக நாடென்பதின் பொருள் எங்கே

ஜனங்களுக்கும் நியதி உள்ளதோ இங்கே?

ஏன் இந்த மக்களுக்கும் இந்தப் புத்தி

ஏய்ப்பவர் கால்நக்கிப் பிழைக்கும் உத்தி!

நன்றெது தீதெது எனப் புரியாதோ – நடக்கும்

அரசியல் நாடகமும் உடையாதோ?

எத்தனை ஊழல் வளருதடா

இறுதியில் வீழ்வது நாம் தானடா?

எதற்காக அளித்தோம் நம் வாக்குகளை

வாய்க்கரிசி போடுவார் வாங்கிடவா?

அரசியல் மாறுது அராஜகம் கூடுது

ஊழல்கள் நிறையுது உண்மைகள் குறையுது!

எதிர்க்கட்சி ஆளுங்கட்சி எகத்தாளம் பேசுது

இறுதியில் நம்தலை கால்ப்பந்தாய் உருளுது!

மன்னராட்சிபோல் மறைவாக நடக்குது

ஒருகுடும்ப அதிகாரம் உயர்ந்தோங்கி நிற்குது!

நாமெல்லாம் அடிமைபோல் நினைக்கவே தோணுது

நூற்றில் என்பதை அரசியல் திண்ணுது!

எஞ்சிய இருபது ஏழைக்கு கிடைக்கிது – அதில்

வருவதோ இருபது வழியிலே பிரியுது!

இறுதியில் கிடைப்பதோ இரண்டு மூன்று தான் ஏது

இரண்டையும் மூன்றாக எண்ணித்தானே கொடுக்குது!

மூன்றுதரும் கட்சி பார்த்து ஏழை மனம் ஓடுது

மூன்றே போதுமென்று மூளையற்று நினைக்குது!

மூன்றுக்கே முழுதாய் வாக்கையும் அளிக்குது – மீண்டும்

ஊழல் தானே அரியணை ஏறுது!

திறமைக்கு முன்னுரிமை கிடைப்பதைத் தடுக்குது

‘சாதிக்காரன் குடுத்திடு’ என்று சட்டங்கள் இயற்றுது!

சட்டம் காக்கும் காவலோ அரசியல் கையிலே இருக்குது

ஆட்சிமுறை இதுவென்று திட்டங்கள் வகுக்குது!

அடிப்படைத் தேவை மறந்துவிட்டு

ஆடம்பரப் பொருள் கொடுக்குது!

இதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டு

செய்தித் தாள்களில் பரப்புது!

நாம் உழைத்த காசோ உயரத்திலே இருக்குது

உழைத்தவர் தூக்கமோ குப்பையிலே முடியுது!

ஆட்சியுடன் அதிகாரம் நாம்தான் கொடுத்தது

அதைக்கொண்டு அரசியல் நம்மையே அடக்குது!

எத்தனை ஊழல்கள் விதவிதமாய் நடக்குது

இடைத்தேர்தல் பொதுத்தேர்தல் அத்தனையும் உடையுது!

எப்போதும் ஊழல்தான் அரியணை ஏறுது – நாம்

எத்தனை நாள்தான் பொறுத்தே போவது!

38.சிகப்பு மலருள் நெருப்பு வண்டு


சொல்லால் மலரும் பூவே கேள் – என்னை

அறியாது உன்னுள் இடறி விழுந்தேன்!

இடறிய காயமும் ஆறாது – இனி

என்னால் எழுந்து வரவும் இயலாது!

காயம் ஆற்றும் காதல் மருந்தை – உன்னுள்

மறைத்தால் என் நிலை யாது!

நான் சேற்றில் வழுக்கி விழவில்லை – செந்தாமரை

உன்மீது விழுந்தேன்!

கலங்கம் செய்யும் கல்லாய் விழவில்லை – உன்

குணத்தேன் பருக வண்டாய் விழுந்தேன்!

இந்த வண்டின் வருகையில் – உனக்கு

விருப்பம் இல்லையா!

உன்னை இரசித்த வண்டை விரட்டிவிட்டு – உன்

தாய்மலர் புகுத்தும் நெருப்பு வண்டை ஏற்பாயோ?

நெருப்பு வண்டினால் நீ கருகுவதை – இந்த

சிகப்பு வண்டும் தாங்கிடுமோ?

என் சொல்லால் மலரும் பூவே சொல் – இந்த

சிகப்பு வண்டும் தாங்கிடுமோ?

39.அழி(ளி)க்கப்பட்ட முகவரி


உணவு இல்லை உடையும் இல்லை

உயிரோடு வாழ்கின்றோம்!

உதவி இல்லை உறவும் இல்லை

உணர்வோடு உலவுகின்றோம்!

வாழ்வும் இல்லை வழியும் இல்லை

வாழத்தான் தவிக்கின்றோம்!

இல்லம் இல்லை இடமும் இல்லை

இதயத்தோடு துடிக்கின்றோம்!

முகவரி இல்லை முகத்தெளிவும் இல்லை

முகத்தை மறைத்து வாழ்கின்றோம்!

கனவும் இல்லை காசும் இல்லை

கண்ணீரோடு அலைகின்றோம்!

தேசம் விட்டு தேசம் சென்று

அகதியாக அழு(லை)கின்றோம்!

40.எப்போது


விழுந்த என் சமுதாயம்

எழுவதெப்போது?

விளைநிலப் பயிரென

வளர்வதெப்போது!

உணவில்லா நிலைகள்

தொலைவதெப்போது?

வீதியில் வாழ்கை

முடிவதெப்போது!

சாதிகள் தொலைந்திடும்

நேரம் எப்போது?

நியாய விலைக் கடையில்

நியதி எப்போது?

மதங்களின் உண்மையை

உணர்வதெப்போது?

வளரும் கொடுமைகள்

சிதைவதெப்போது?

ஏழைக்கு அநீதி

அழிவதெப்போது?

உழைப்புக்கு உரிய கூலி

கிடைப்பதெப்போது?

ஒருபுறச் செல்வம்

குறைவதெப்போது?

உயிரின் மதிப்பை

அறிவதெப்போது?

உணர்வுக்கு வலியுண்டு

உணர்வதெப்போது?

ஏற்றத் தாழ்வினில் சமநிலை

பிறப்பதெப்போது?

நிறவெறி வேற்றுமை

அழிவதெப்போது?

ஆதிக்க வர்க்கத்தின்

அடக்கம் எப்போது?

பெண்ணுக்குச் சுதந்திரம்

பிறப்பதெப்போது?

வாய்ப்புகள் எல்லோர்க்கும்

கிடைப்பதெப்போது?

திறமையின் பெயரில் பணி

கிடைப்பதெப்போது?

சமம்படக் கல்வி

பெறுவதெப்போது?

சமத்துவ இருக்கைகள்

அமைவதெப்போது?

குப்பைத் தொட்டில்கள்

தொலைவதெப்போது?

உண்மைக்கு நியதி

கிடைப்பதெப்போது?

கந்தல் துணிமேனி

மாற்றம் எப்போது?

குழந்தைத் தொழில் கொடுமைகள்

ஒழிவதெப்போது?

சாக்கடைமேல் வாழ்க்கை

ஏற்றம் எப்போது?

கடும் காமக் கொடியவர்

அழிவதெப்போது?

சிறையினில் நீதி

புகுவதெப்போது?

முதியவர் காப்பகத் தேவை

முடிவதெப்போது?

முதியோர் சொல்பட

நடப்பதெப்போது?

உறுதிபட அரசியலுள்

உழைப்பதெப்போது?

ஓரின அதிகாரம்

ஒழிவதெப்போது?

அடிப்படை உரிமைகள்

அடைவதெப்போது?

செருப்புடன் கால்கள்

நடப்பதெப்போது?

குனிந்த முதுகு

நிமிர்வதெப்போது?

ஏழையின் குரல் எங்கும்

ஒலிப்பதெப்போது?

ஏழ்மைக்கு சதி

உடைவதெப்போது?

வகுப்பு(க்கு)(க)ள் வன்முறை

வடிவதெப்போது?

எல்லாம் சமம்பட

அமைவதெப்போது?

எதிரிகள் இல்லா

வாழ்கை எப்போது?

அன்பே ஆட்சியாய்

ஆவதெப்போது?

தமிழா! எடுத்த சபதம் – நாம்

முடிப்பதெப்போது?

41.உறக்கப்போர்


ஏதோ சிந்தனையில்

என்னை நான்

தொலைத்தேன்!

ஏதென தேடிச் சென்றால்

காதலில் சிக்கித்

தவித்தேன்!

என்னை உணர மறந்துவிட்டு

உன்னில் உறைய

நினைத்தேன்!

உன்பார்வை படும் நாளை எண்ணி

பார்வை இழந்து

தவித்தேன்!

நெஞ்சில் உன்னை வைத்துக்கொண்டு

சுகமாய்ச் சுற்றித்

திரிந்தேன்!

உறங்கா விழியோடு போராடி

தினம் உறங்கிடவே

முயன்றேன்!

காதல் என்னும் வரம் வாங்கி

தினம் இறந்தும் பிறந்தும்

வாழ்ந்தேன்!

ஆம்!

தினம் இறந்தும் பிறந்தும்

வாழ்ந்தேன்!

42.துணிந்து வெல்க


மனிதா மண்ணில் பிறந்ததன்

மகத்துவம் அறிந்துகொள்!

விண்ணில் பறந்து

விளையாடவும் கற்றுக்கொள்!

தன்னிகரில்லா அறிவை

தனக்குள்ளே வளர்த்துக்கொள்!

பார்க்கும் திசையெல்லாம்

பாசத்தை விழிவழி விதைத்திடு!

உன்னில் தவறின்றி பிழை சொன்னால்

தீப்பார்வை கொண்டு எரித்திடு!

ஒழுக்கத்தை உட்கொண்டு

உடலை உறுதிசெய்தேத்திடு!

சீறும் எரிமலையாய்

செயலில் தடைகளைத் தகர்த்திடு!

உன் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து

வாழ்வை உனதாய் மாற்றிடு!

43.சிரிக்கும் உலகம்


உன்னையும் என்னையும் பார்த்து

உலகம் சிரிக்குமடா!

உள்ளதைக் கொடுத்து நல்லதைத் செய்தால்

ஊரே சிரிக்குமடா!

ஓடி ஓடி உதவி செய்தால்

பேரு வைப்பான்டா!

ஊதாரிப்பய இவந்தான்னு

ஊன மனசுக்காரன் சொல்வாண்டா!

கஷ்டப்படும் மனிதனுக்கு

கையைக் கொடுத்து

கஷ்டத்திலே பாதிப் பங்கை

நாம எடுத்தா

பிழைக்கத் தெரியாதவன்னு

ஒருத்தன் சொன்னாண்டா!

அவன் பிழைப்பில்லாமல் அலைகிறவன்

போனாப் போறாண்டா!

மூத்தோர் முன்னே பணிந்து நடந்து

நானும் நின்னேண்டா!

பயத்தில் பையன் பதுங்குறான்னு

பழியைப் போட்டாண்டா!

பலர் முகத்தின் முன்னே சிரித்துவிட்டு

முதுகில் குத்துறான்!

சிலர் முகத்தின் முன்னே துணிந்து நின்று

காரித் துப்புறான்!

மனிதனுக்கு மனிதன் தாண்டா

எதிரி ஆகிறான் – இங்கு

எமனும்கூட இவனைக் கண்டால்

உயிர் தெறித்து ஓடுவான்!

44.நினைவுக்குள் வாழ்வு


பெண்ணே!

உன் நிறம் கண்டு நேசிக்கவில்லை – உன்

குணம் கண்டு நேசித்தேன்!

நிறத்தை நேசித்திருந்தால் – நான்

மஞ்சள் நிற நெருப்பினில் விழுந்திருப்பேன்!

உன் குணத்தையே நேசித்ததால் – நான்

உன்னைக் குருதியாய் ஏற்றுக்கொண்டேன்.

குருதியாய் நீயும் பிரிந்து சென்றால் – இங்கு

தனியாய் இதயமும் துடித்திடுமோ!

காதலென்னும் இசையும் அடங்கிவிடும் – உன்

நினைவால் என் வாழ்வும் பொசுங்கிவிடும்!

45. விதியை வெல்லும் மதி


மனிதா! மதியின் மகத்துவம் அறிந்துகொள் – தினம்

விதியென்று சொல்வதை நிறுத்திக்கொள்!

விதி விதியென்று தலையில் அடிக்காதே – நல்ல

மதிதனை மண்ணுள் புதைக்காதே!

இரசிப்பினில் வாழ்வைத் தொடர்ந்தாலே – பெரும்

இழப்பையும் நம் மனம் தாங்கிடுமே!

சிந்தையுள் விதியினைப் புகுத்திவிட்டால் – நம்

வாழ்வும் சதியினில் புதைந்துவிடும்!

விதியெனச் சொல்பவன் மனிதனல்ல – மனிதன்

மதியினால் விதியை வெல்வானே!

சேற்றினில் கால்வைக்கும் உழவன் – அவன்

விதியினில் விழுந்தால் தொலைவானே!

மதிதான் வாழ்வென உணர்வோமே – நல்ல

மனிதராய்ப் புவியினில் வாழ்வோமே!

மனதினில் மதிதனை மறைத்து வைத்தால் – நாளை

விதிதான் வாழ்வில் விளையாடும்!

மனிதா! மதியின் விளைநிலம் நாமேயாம் – இனி

விதியினைக் களைந்தெரிவோமேயாம்!

46.மர்ம மனம்


ஆத்திகம் நாத்திகம்

ஐந்தைய்ந்தெழுத்து!

அதனுள் அடங்கிய ஆற்றலோ

மூன்றெழுத்து!

பிரபஞ்சம் நிறைந்த புழுதியே

பூமியாம்!

பூமியில் புதைந்த மர்மமே

சாமியாம்!

ஆத்திகம் என்பார்சொல்

அதன்பொழுதே நடந்திடுமாம்!

நாத்திகம் பேசிடுவார்

நலனறிந்து சொல்வாராம்!

கடவுளும் கடமையுமாய்

கட்டிக் கரையணையும் பூமியிது!

இதில் இரண்டிற்கும் உயிர்தர

மனம் தவிர வேறேது!

மறைந்த பொருளாய் மனமே

தினம் விரிந்த பொருளைத் தருமே!

எதுவாகத் துடிப்பினும் மனமே

அதுவாக துடிக்கும் தினமே!

மறைவாய் இருப்பது மனமே

தினம் ஆ(நா)த்திகப் பொருள் தருமே!

47.இறப்பினில் வாழ்க்கை


அடி பெண்ணே – என்

விருப்பை வெறுப்பால்

எரிப்பவளே!

உன்னை நேசித்த நாட்களிலிருந்து

என்னை ஒருத்தி

நேசிக்கிறாள்!

நீ என்னை ஏற்க மறுத்தால்

அவளை நான்

ஏற்பேன்!

உன் நினைவோடு அவள்

கரம்பற்றி மடி

சாய்வேன்!

என் காதல் சோகம் உடல் உயிரென

அனைத்தையும்

அள்ளிக்கொள்வாள்!

இறுதியில் யார் எனக் கேட்டால்

‘மரணம்’ என்ற மங்கை

என்பாள்!

வாழ்வில் நிகழ்வது இருமணம்

அது உலகறிந்த திருமணம்

மற்றொன்று மரணம்!

நீ ஏற்றால் நம் திருமணம்

மறுத்தால் என் உடல்

மரணம்!

இதுவே என் வாழ்வில் மறுமணம்

அவளே மணப்பெண்

என்னும் மரணம்!

உன் நினைவென்னும் உறக்கத்தில்

கனவென்னும் கைப்பிடித்து

மரணமென்னும் மங்கையை மணந்து

முடிவென்னும் இறப்பினில் – கனவென்னும்

என் இன்னொரு வாழ்வு

தொடரட்டும்!

48.பிறர் உயிருக்கு உரம்


அதிகாலை எழுவோம்

அலையாய் விரைவோம்!

உயிர்கொண்ட உடலை

உரமேற்றிக் குளிப்போம்!

தோளில் பல பொருள் தொடுத்துத்

தேர்போலே நடப்போம்!

வளர்ந்து வளைந்து சாய்ந்த பயிருடன்

வண்ணமொழி பேசுவோம்!

குளிர்ந்த சேற்றில் குதியை வைத்து

குறுதியைக் குளிரச்செய்வோம்!

குனிந்ததலை நிமிராது தினம் எங்கள்

குலத்தொழில் புரிந்திடுவோம்!

உச்சிப் பொழுதில் மூவர் மூவராய்

உணவைப் பகிர்ந்திடுவோம்!

அந்திவெயில் சாயும் வரையில் வயலை

அழகு செய்திடுவோம்!

கற்பினுக்கினியவள் காத்திருக்க நாங்கள்

கரைமீது ஏறிடுவோம்!

நல்ல நாள் பார்த்து நெல்மணிகளை

கட்டி உதிர்த்திடுவோம்!

நல்லோர் தீயோர் பாராது – நாங்கள்

நாற்திசையும் கொடுத்திடுவோம்!

நல்லோர் வாங்கிப் புசித்துவிட்டு

நலமுற வாழ்த்திடவே!

எல்லோர் உயிருக்கும் உரமாக – எங்கள்

உயிரைத் தந்திடுவோம்!

49.புரிவாய்த் துணிவாய்


விழப் பயந்தால் மழை இல்லை!

எழ மறந்தால் அலை இல்லை!

குதிக்க மறுத்தால் அருவி இல்லை!

சூரியன் வெறுத்தால் வெளிச்சமில்லை!

இருள் பரவ மறுத்தால் நிலவு இல்லை!

வானம் சிரிக்கச் சலித்தால் இடி இல்லை!

நிலம் உயர மறுத்தால் மலை இல்லை!

மேகம் உருக மறுத்தால் நீர்த்துளியும் இல்லை!

உயிர் இருக்க மறுத்தால் உடல் அசைவதில்லை!

அன்னை சுமக்க மறுத்தால் இன்று நாமே இல்லை!

இமை திறக்க மறுத்தால் விடியல் இல்லை!

அவை மூட மறுத்தால் உறக்கம் இல்லை!

கசப்பின்றி இனிப்பு திளைப்பதில்லை!

துன்பமின்றி இன்பம் இனிப்பதில்லை!

தவறின்றி சட்டம் பிறப்பதில்லை!

சட்டம் பிறப்பினும் தவறு குறைவதில்லை!

உணர மறுத்தால் உலகம் புரிவதில்லை – மனிதன்

புரிய மறுத்தால் வாழ்வில் இனிமை இல்லை!

50.போய் வா நட்பே


சின்னச் சின்னச் சண்டைகளும்

சிணுங்கி அழும் தோழிகளும்

வண்ணமான நிமிடங்களும்

கடைசியாய் வட்டமிடும் நாள் இது!

ஆடிய ஆட்டங்களும்

பாடிய பாட்டுக்களும்

நம் காதருகில் நின்று

கவிதை சொல்லும் நாள் இது!

சிரித்த நிமிடங்களும்

சிலிர்க்க வைத்த விசயங்களும்

வலித்த நொடிகளும்

மீண்டும் நினைக்க ஓர் இடம் இது!

தொலைத்த உறவுகளையும்

தொலைவில் நின்ற உணர்வுகளையும்

மீண்டும் கலக்கின்ற நட்போடு

கண்ணீர் சிந்தும் நாள் இது!

தொடர் நட்பினில்

தொலைத்த இன்பங்களை

தொடர்ந்து பேசிட

துடிக்கின்ற நாள் இது!

பாசம்கொண்ட நண்பனையும்

பாட்டிசைத்த தோழியையும்

நேசம்கொண்ட நெஞ்சோடு

நெருங்கி நிற்கும் நாள் இது!

ஒரு கையில் உணவெடுத்து

ஒன்பதுபேர் பகிர்ந்துகொண்டு

ஒற்றுமையாய் வாழ்ந்த நம்மை

பிரிக்கின்ற நாள் இது!

உறவாடிய இருக்கைகளும்

ஒளிந்து நின்ற கதவுகளும்

கசிந்துருகும் கண்ணீரை

கடன் கேட்கும் நாள் இது!

கல்வியைப் பாலாய்த் தந்த

கரும்பலகை அன்னையிடம்

காதல் கலந்த முத்தத்தால்

விடைகேட்கும் நாள் இது!

கல்லான நம் மனதை

சொல்லென்ற உளி தொடுத்து

பொற்சிலையாய் வடித்தோரை

பிரிந்துசெல்லும் நாள் இது!

மூன்றாண்டு தவம் முடித்து

முத்துக்களாய் உருவெடுத்து

முண்டிவரும் கண்ணீரோடு

பிரிந்து செல்லும் கடைசி நாள்!

போய் வா நட்பே!

போய் வா!

....................................................................